Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 11)
Sri Kshama Shodashi
ந த்வம் க்ஷாம்யஸி சேதிதம் மம க்ருதம் நாஸ்த்யத்ர காசித் க்ஷதி: பூர்வம் யத் ஸமபூத் ததேவ ஹி புநர் ஜாயேத தத் ஜாயதாம் யத்வா ஸ்யாத் அதிகம் ச ஸ: அபி ஸுமஹாந் லாபோஸ்து மே தாத்ருச: ஸ்வாமிந்! தாஸ ஜநஸ் தவாயம் அதிகம் ஸ்வைரேண தூரீபவேத்
ஸ்ரீரங்கநாதா! எனக்கு வேறு புகலிடம் இல்லை என்று கூறிவிட்டேன். இதனையும் ஏற்காமல் நீ தண்டித்தே தீருவேன் என்றிருந்தால் எனக்கு எந்தவிதமான பெரிய பாதிப்பும் உண்டாகப்போவதில்லை. ஏன் என்றால் – இதுவரை பலகாலம் நான் பாபங்களைச் சுமந்தும், துன்பத்தில் மூழ்கியும் பழக்கப்பட்டவன் ஆவேன். அப்போது உண்டான துன்பங்கள் போன்றுதானே இப்போதும் ஏற்படப்போகிறது! புதிதாக என்ன உண்டாகப்போகிறது? ஆகவே அனுபவித்து விட்டுப்போகிறேன். அல்லது முந்தைய துன்பங்களைக் காட்டிலும் அதிக துன்பம் வந்தது என்றாலும், இத்தனை நாட்கள் கிட்டாமல் இருந்தது இப்போது கிட்டியது என்று எண்ணிக்கொண்டு சென்றுவிடுவேன், ஆனால் உனக்கு என்ன நேரும் என்று எண்ணிப் பார்த்தாயா? எனது பாபங்களை நீ பொறுக்காமல் தண்டித்த காரணத்தால் நான் உன்னை விட்டு விலகக்கூடும் (அதாவது பாபங்களின் பலன் காரணமாக இவர் ஸ்ரீரங்கநாதனை அண்ட இயலாமல் பாபங்கள் இவரைத் தடுத்து விடும் என்று பொருள் கொள்ளவேண்டும்; பாபங்களைத் தண்டிக்காமல் விட்டதால் இவர் அரங்கனிடம் கோபித்துக் கொண்டு செல்வதாக எண்ணக்கூடாது). ஆக உன்னைச் சார்ந்த உடமை வெளியே சென்று விட்டால் உனக்கு அல்லவோ அது நஷ்டம்? ஆக என்னைப் போன்று உனது உடைமைகள் சென்று விடக்கூடாது என்றால் பாபங்களைப் பொறுப்பாயாக.
கடந்த ச்லோகத்தில் இவரது மிரட்டலைக் கேட்ட அரங்கன், ”ஓய்! நாம் சரம ச்லோகத்தில் கூறியவை, அனைத்து விஷயங்களையும் கைவிட்டு என்னை மட்டுமே சரணம் என்று புகுந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். உமக்கு அது ஏற்காது. ஆகவே உமக்கு நான் பொறுமை காண்பிக்கமாட்டேன்”, என்று கூற இவர் இந்த ச்லோகத்தை உரைக்கிறார்.