Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 8)
Sri Kshama Shodashi
க்ஷாந்திர் நாம வரோ குணஸ் தவ மஹாந் ஸ்ரீரங்க ப்ருத்வீ பதே! ஸோயம் ஸந்நபி ஸாபராத நிவஹா பாவே ந வித்யோததே தஸ்மாந் நைகவிதாபராதகரணே நிஷ்டாவதா நித்யச: ப்ராப்நோத்யேஷ மயா ப்ரகாசமதுலம் ப்ராப்ஸ்யாம் யஹம் ச ப்ரதாம்
நம்பெருமாளே! ஸ்ரீரங்கராஜனே! உன்னிடம் எத்தனையோ குணங்கள் எல்லையற்றும், கணக்கற்றும் உள்ளபோதிலும், உனது பொறுமை என்ற குணமே மிகவும் பெரியதாகும். பிழை செய்பவர்கள் பலர் இல்லை என்றால், இந்தக் குணம் வெளிப்படாமலேயே இருந்து விடக்கூடும் (நாளடைவில் உனக்கு இந்தக் குணம் உள்ளது என்பதையே மறக்கும் நிலை உண்டாகும்). ஆகவே பலவிதமான எல்லையற்ற பாபங்களைச் செய்வதில் மிகுந்த நாட்டமும் சபதமும் கொண்டுள்ள என் மூலமாக அந்தக் குணம் மிகவும் சீரியதாக வெளிப்பட்டபடி இருக்கும் அல்லவோ? ஆக உனது வெளிப்படாத குணத்தை எப்போதும் நீ வெளிப்படுத்தியபடி உள்ளதற்குக் காரணமாக நான் உள்ளதால் உண்டாகும் பெரும்புகழ் எனக்குக் கிட்டுகிறது.
கடந்த ச்லோகத்தில் இவர் கூறியதைக் கேட்ட அரங்கன், “நமக்கு எத்தனையோ குணங்கள் உள்ளன. அவற்றின் பெருமைகளே நமக்குப் போதுமானது. மற்றவர்கள் நமது க்ஷமை பற்றித் தவறாகக் கூறினால் கூறிவிட்டுப் போகிறார்கள். நீவிர் எவ்விதம் பாபங்களைப் பற்றியும், அதற்கான தண்டனைகளைப் பற்றியும் கவலை கொள்வதில்லையோ, அது போன்று அவர்களின் தூற்றுதல்கள் குறித்து நாம் கவலைப்படுவதாக இல்லை. உம்மை நம்மால் பொறுக்க இயலாது”, என்றான். இதனைக் கேட்ட இவர் பதிலை உரைக்கிறார்.