Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 6)

Sri Kshama Shodashi

ந த்வித்ராணி க்ருதாந்யநேந நிரயைர் நாலம் புந: கல்பிதை: பாபாநாம் இதி மத்க்ருதே தததிகாந் கர்த்தும் ப்ரவ்ருத்தே த்வயி தேப்ய: அப்யப்யதிகாநி தாந்யஹமபி க்ஷுத்ர: கரோமி க்ஷணாத் தத் யத்நஸ் தவ நிஷ்பல: கலு பவேத் தத் தே க்ஷமைவ க்ஷமா

பெரியபெருமாளே! எனக்கு எனது பாபங்களுக்கான தண்டனையை அளிப்பது என்று முடிவு செய்த பின்னர் நீ என்ன செய்வாய் என்றால் உனது மனதில், “இவன் செய்த பாபங்கள் கணக்கற்றவை. ஆகவே நாம் இப்போது உருவாக்கி வைத்துள்ள நரகங்களின் எண்ணிக்கை போதாது. எனவே மேலும் நரகங்களை நாம் உருவாக்குவோம்”, என்று எண்ணக்கூடும். இதன் விளைவாக நீ மேன்மேலும் நரகங்களைப் படைத்தபடி இருப்பாய். அப்படிப்பட்ட நரகங்களின் எண்ணிக்கையும் போதாது என்ற நிலை உண்டாகும்படியாக நான் பல பாபங்களை ஒரு நொடியில் செய்து நிற்பேன். இப்படியாக நரகங்களைப் படைப்பதில் நீ வல்லவனா, மேன்மேலும் பாபங்களைச் செய்வதில் நான் வல்லவனா என்ற போட்டி உண்டானால், அற்பனான என் மூலம் நீ மிகப் பெரிய தோல்வியையே அடைவாய்; இந்தத் தோல்வியின் விளைவால் உன்னுடைய மேன்மை தாழ்ந்துவிடும்; பாபங்கள் பல என்னிடம் உள்ளதால், எனது மேன்மை ஓங்கியே நிற்கும். ஆகவே எனக்கு தண்டனை அளித்தல் என்ற உன்னுடைய வீணான முயற்சியைக் கைவிட்டு, எனது பாபங்களைப் பொறுத்துக்கொள்வதே உசிதமாகும்.

இதனைக் கேட்ட அரங்கன், ”நீவிர் எத்தனை சாமர்த்தியமாகப் பேசினாலும் நம்மை ஏமாற்ற இயலாது. உமது பாபங்களுக்கான தண்டனையை நாம் அளித்தே தீருவோம்”, என்றான். உடனே இவர் இந்த ச்லோகத்தை உரைக்கிறார்.