Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 5)

Sri Kshama Shodashi

புண்யம் யத் தவ பூஜனம் பவதி சேத் தத் கர்த்துரிஷ்டே க்ருதே தத் ஸ்யாத் ரங்கபதே! க்ருத ப்ரதிக்ருதம் ஸர்வே அபி தத் குர்வதே பாபம் சேத் அபராத ஏவ பவதஸ் தத் கர்த்ரு ஸம்ரக்ஷணே க்ஷாந்திஸ் தே நிருபாதிகா நிருபமா லக்ஷ்யேத தத் க்ஷம்யதாம்

அழகியமணவாளா! அவரவர்களின் வர்ணங்களுடைய தர்மங்களின்படி புண்ணியங்கள் செய்தல் என்பது உன்னுடைய ஆராதனமாகவே உள்ளது என்பதை அடியேன் மறுக்கவில்லை. ஆனால் இவ்விதம் புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே நீ அவர்கள் விருப்பியதைச் செய்கிறாய் என்றால், “தனக்கு உதவி செய்தவர்களுக்கு மட்டுமே உதவி செய்தல்” என்ற ந்யாயம் போன்று உனது செய்கை ஆகிவிடுமே! தனக்கு நன்மை செய்தவர்களுக்கு மட்டுமே இந்த உலகில் உள்ளவர்கள் மீண்டும் நன்மை செய்வதைக் காணலாம். இப்படி உள்ளபோது அவர்கள் செய்வது போன்றே நீயும் செய்தால், உனக்கு என்ன ஏற்றம் உள்ளது? சாதாரண மக்களின் செய்கை போன்று அல்லவோ உனது செய்கையும் உள்ளது? ஆனால் உனக்கு அபராதம் செய்வதன் மூலமே பாவச்செயல்கள் ஒருவனுக்கு உண்டாவதால், அவ்விதம் உனக்கு அபராதம் செய்தவனைக் காப்பாற்றி (பாவம் செய்தவனைக் காப்பாற்றி) மன்னித்தால் மட்டுமே, உனது பொறுமை என்பது எந்தவிதமான ப்ரதி உபகாரமும் இன்றி ஏற்பட்டது என்று கூறப்படும். இதனால்தான் நீ ஒப்பில்லாதவன் என்று பெயர் பெறுவாய். ஆகவே எனது பாபங்களை நீ பொறுக்க வேண்டும்.

கடந்த ச்லோகத்தில் இவர் கூறியதைக் கேட்ட அரங்கன், “நீவிர் பாவம் மட்டுமே செய்ததாக உரைக்கிறீர். ஆனால் நமக்கு உம்மீது அன்பு ஏற்படவேண்டும் என்றால், நீவிர் சிறிதளவாவது புண்ணியம் செய்திருக்கவேண்டாமோ?”, என்றான். இதற்கு, “புண்ணியம் செய்தவர்களைக் காட்டிலும் பாபங்கள் நிறைந்தவர்களைக் காப்பதே உசிதம் அல்லவோ?”, என்கிறார்.