Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 2)

Sri Kshama Shodashi

பாபாநாம் ப்ரதம: அஸ்மி அஹம் பவதிசேத் சாஸ்த்ரம் ப்ரமாணம் பரம் ஸ்ரீரங்கேச! ந வித்யதே அத்ர விசய: ஸந்த்யேவ தே ஸாக்ஷிண: ப்ருஷ்ட்வா தாந் அதுநா மயோதிதமிதம் ஸத்யேந க்ருஹ்யேத் சேத் ஸத்யம் ஹி உக்தமிதி க்ஷமஸ்வ பகவந் ஸர்வம் தத் அஸ்மத் க்ருதம்

ஹே ஸ்ரீரங்கநாதா! நம்பெருமாளே! பலவிதமான பாபங்கள் செய்வதில் நான் முதன்மையாக உள்ளேன். இதனை நான் எப்படிக் கூறுகிறேன் என்றால், பலவிதமான சாஸ்த்ர ப்ரமாணங்கள் கொண்டு என்னுடைய ஒவ்வொரு செயலையும் நன்றாக ஆராய்ந்தால், அவை அனைத்தும் பாபங்களே என்பதில் சந்தேகமே இல்லை. நான் கூறுவதை நீ நம்பவில்லை என்றால், உன்னால் ஏற்படுத்தப்பட்டு எப்போதும் என்னைச் சூழ்ந்துள்ள காற்று போன்றவற்றைக் கேட்டுப் பார்ப்பாயாக. அதன் பின்னர் நான் கூறுவது உண்மை என்று விளங்கும். அப்போது நீ ஏன் என்னை மன்னிக்கவேண்டும் என்றால், “பொய்யை மட்டுமே உரைக்கும் இந்த உலகில், உண்மையை இவன் ஒப்புக்கொண்டானே”, என்று வியந்து பொறுத்துக் கொள்வாயாக.

இவர் தனது க்ஷமையைப் போற்றியபடி, அவளிடம் சரணம் புகுந்து நின்றதைக் கண்ட அரங்கன், “பலவிதமான பாபங்கள் செய்தவர்கள் அல்லவோ நம்மிடம் பயந்தபடி, நம்முடைய பொறுமை என்ற குணத்தைத் தஞ்சம் அடையவேண்டும். நீவீர் மிகுந்த உத்தமராயிற்றே! ஏன் இவ்விதம் சரணம் அடையவேண்டும்?”, என்று ஏதும் அறியாதவன் போன்று வியந்தான். இதற்கு விடை அளிக்கிறார். பலவிதமான பாபங்கள் செய்த பின்னர் அரங்கனிடம் வந்து நிற்கும் நம்மைக் கண்டு, “நீ பாபமே செய்யவில்லையே! பின்னர் ஏன் நமது க்ஷமையிடம் சரணம் புகுந்தாய்” என்று கூறுவான். இது அவன் இயல்பாகும். காரணம், பெரியாழ்வார் திருமொழி (4-9-2) - தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் – என்றவன் ஆயிற்றே அவன்! இதனைக் கேட்டவுடன் நாம் கூறுவது, “வேதங்களில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி ஆராய்ந்தால் நான் செய்யும் எதுவும் நற்செயல் அல்ல, அனைத்தும் பாபங்களே”, எனலாம். இதனைக் கேட்ட அரங்கன், “நீ கூறுவதை நாம் எவ்விதம் நம்புவது? ஏதேனும் சாட்சி உண்டோ?”, என்பான். உடனே நாம், ”திருவாய்மொழி (6-9-1) - நீராய் நிலனாய்த் தீயாய் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்களிரண்டாய் - என்பதற்கு ஏற்ப, என்னைச் சுற்றியுள்ள அனைத்தும் நீயாகவும், உன்னால் படைக்கப்பட்ட வஸ்துக்களாகவும் உள்ளபோது அவைகளே சாட்சியாகின்றன”, எனலாம். உடனே அவன், ”நம்மிடம் இவன் உண்மையை கூறினான்”, என்று பொறுத்துக்கொள்வான்.