Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 1)
Sri Kshama Shodashi
ஸ்ரீரங்கேச! யயா கரோஷி ஜகதாம் ஸ்ருஷ்டி ப்ரதிஷ்டாக்ஷயாந் அத்ராமுத்ர ச போகமக்ஷயஸுகம் மோக்ஷஞ்ச தத் தத் த்ருஷாம் த்வத் ஸ்வாதந்த்ர்யம் அபாஸ்ய கல்பித ஜகத் க்ஷேமாதி ஹ்ருத்யா ஸ்வத: க்ஷாந்திஸ் தே கருணாஸகீ விஜயதாம் க்ஷேமாய ஸர்வாத்மநாம்
ஸ்ரீரங்கநாதா! அழகியமணவாளா! உன்னுடைய எந்த க்ஷமை என்ற குணம் மூலமாக இந்த உலகின் படைப்பு, காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்கிறாயோ; இந்த உலகில் உள்ளவர்களுக்கு அவர்களின் மனைவி மற்றும் மக்கள் மூலமாகக் கிட்டவல்ல இன்பத்தை அளிக்கிறாயோ; இந்த உலகை விட்டு நீங்கிய பின்னர் அவரவர்கள் வேண்டியபடி ஸ்வர்க்கம் போன்ற சுகங்களை அளிக்கிறாயோ; எதன் மூலம் உனக்கு இயல்பாகவே உள்ள ஸ்வாதந்த்ர்யம் என்னும் யாருக்கும் கட்டுப்படாத தன்மை நீக்கப்பட்டு இந்த உலகிற்குத் தேவையான க்ஷேமம் நிலை நாட்டப்படுகிறதோ; எந்த ஒன்று அனைவரையும் உன்பால் ஈர்க்கும்படிச் செய்கிறதோ; உனது தயை என்ற குணத்திற்கு எந்த ஒன்று தோழியாக உள்ளதோ – அத்தகைய ”க்ஷமை” என்பது இந்த உலகின் நன்மைக்காக நீடுழி வாழவேண்டும்.
இந்த ச்லோகத்தின் மூலம் ஸ்ரீரங்கநாதனின் க்ஷமை என்ற குணத்தைப் போற்றுகிறார். முதலில் ஸ்ரீரங்கநாதனைப் பணியாமல் அவனிடம் அடிமையாக உள்ள ஒரு குணத்தைப் போற்றுவது சரியா? ஸ்வாமி பராசரபட்டர் தனது ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் (2-57) – பகவத: த்வராயை நம: - கஜேந்த்ரனின் கூக்குரலைக் கேட்டவுடன் கருடன் மீது கூட ஏறாமல், அரக்கப் பரக்க ஓடிவந்த ஸ்ரீரங்கநாதனின் பதற்றத்திற்கு நமஸ்காரம் – என்று ஸ்ரீரங்கநாதனின் வேகத்தை அல்லவோ வணங்கினார்? அவர் வழிவந்த இவரும் ஸ்ரீரங்கநாதனின் க்ஷமை என்னும் குணத்தைப் போற்றுகிறர். பல குணங்கள் உள்ளபோது ஏன் இதனை மட்டுமே எடுக்கவேண்டும்? நாம் செய்கின்ற பலவிதமான பாபங்களைக் கண்ட அழகியமணவாளன், “ஒருவனால் இத்தனை பாபங்கள் செய்ய இயலுமா?” என்று வியந்து, ”நமக்குச் சொந்தமான இவன் இப்படி வீணாகிறானே!”, என்று உள்ளம் கலங்கி நிற்பான். அப்போது அந்தக் கலக்கத்தின் விளைவாக, அவற்றை மன்னிக்காமல், தண்டித்து விடக்கூடும். பொறுமையே வடிவான அவன் தண்டிப்பானா என்றால், கீதையில் (6-19) – தாநஹம் - என்னைத் த்வேஷிப்பவர்கள், கொடியமனம் கொண்டவர்கள், கீழ்த்தன்மை கொண்டவர்கள் போன்றவர்களை நான் ஸம்ஸாரத்தில் குறிப்பாக அசுரர்களின் பிறப்பில் தள்ளுகிறேன் – என்றான் அல்லவோ? பொறுமையே வடிவான இவனுக்கு இவ்விதம் தண்டிக்கும் நிலை எப்படிப் பொருந்தும் என்றால், இவனது தடையற்ற சுதந்திரம் காரணமாக ஆகும். இத்தகைய ஸ்வாதந்த்ர்யம் வெளிப்படாமல் தடுக்கவல்லது க்ஷமை குணமே ஆகும். எனவே இந்த ச்லோகம் மூலம் நம்பெருமாளின் அத்தகைய க்ஷமை குணம் எப்போதும் ஓங்கி நிற்கவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். இங்கு கருணாஸகீ என்றது காண்க. அதாவது அரங்கனின் தயை என்னும் குணம், அவனது க்ஷமை என்பவளுக்குத் தோழி என்றார். பொதுவாக தயை குணத்தைப் பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்குக் கூறுவது மரபு. இதனை தயாசதகத்திலும் காணலாம். இந்த தயை என்பவளைத் தோழி என்றால், க்ஷமை குணத்திற்குத் தோழியாக ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள் என்றாகிறது. பொதுவாக இன்ன நாயகி ஒருவளுக்கு, இன்னவள் தோழி என்று உரைப்பது வழக்கம். ஆனால் இங்கு ஸ்ரீரங்கநாதனின் நாயகியான ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தோழி என்று உரைக்காமல், அவனது பொறுமை என்னும் குணத்திற்கு, அவனது தயையாகிய ஸ்ரீரங்கநாச்சியாரைத் தோழி என்று உரைத்தது காண்க. இது சரியே ஆகும். எப்படி? பொறுமை என்பது பூமிக்கு இலக்கணம் ஆகும். பூமி என்னும் பூமாதேவியின் அம்சம் ஆண்டாள் ஆவாள். திருவரங்கத்தில் ஆண்டாளை அரங்கன் திருக்கரம் பற்றியதால் அவளை இங்கு நாயகியாகவும், அவளது தோழியாக ஸ்ரீரங்கநாச்சியாரை உரைத்ததும் பொருத்தம் அல்லவோ? ஆக இங்கு ஆண்டாளைத் தஞ்சம் என்று அடைகிறார் என்றும் கூறலாம்.