Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 61)

Sri Guna Ratna Kosam

ஸ்ரீரங்கே சரதச்சதம் ஸஹ ஸுஹ்ருத்வர்கேண நிஷ்கண்டகம் நிர்துக்கம் ஸுஸுகஞ்ச தாஸ்யரஸிகாம் புக்த்வா ஸம்ருத்திம் பராம் யுஷ்மத் பாத ஸரோருஹாந்தர ரஜ: ஸ்யாம த்வமம்பா பிதா ஸர்வம் தர்மமபி த்வமேவ பவ ந: ஸ்வீகுர்வகஸ்மாத் க்ருபாம்

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில், உனது அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும். அப்படி உள்ளபோது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல், இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும். உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும். உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன் நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும். நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும். நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய். இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.

இங்கு தன்னை திருவரங்கத்தில் பல ஆண்டுகள், திவ்யதம்பதிகளுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்க வேண்டும்; அந்தக் கைங்கர்யத்துக்கு எந்தவிதமான இடையூறும் வரக்கூடாது என்று வேண்டுகிறார். கத்யத்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று வாழ்த்திக் கூறியது போன்று, தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார் போலும்.