Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 59)
Sri Guna Ratna Kosam
ஜ்ஞாந க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சநோஹம் இச்சாதிகார சகநாநுசயா ந பிஜ்ஞ: ஆகாம்ஸி தேவி யுவயோரபி துஸ்ஸஹாநி பத்நாமி மூர்க்கசரித: தவ துர்பரோஸ்மி
தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடையவேண்டும் என்ற உயர்ந்த ஆசையும், அந்தப் பதவியை அடைய வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை. இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை. “சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை! இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன். மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன். இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.
இந்தச் ச்லோகத்தில் சரணாகதிக்கு வேண்டிய முக்கிய தகுதியான - என்னிடம் எந்த உபாயமும் இல்லை - என்று பகவானிடம் விண்ணப்பம் செய்வது விளக்கப்பட்டது காண்க. மேலும், பிராட்டியை முன்னிட்டே அவனை அடையவேண்டும் என்ற முறையால், இவளிடம் இதனைக் கூறுகிறார். மேலும் மறைமுகமாக, “எனக்குத் தகுதி ஏதும் இல்லை என்று எண்ணி, நீ என்னைக் கை விட்டுவிடுவாயா?”, என்று கேட்கிறார்.