Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 52)
Sri Guna Ratna Kosam
பிதேவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ: கிமேதந் நிர்தோஷ: க இஹ ஜகதீதித்வமுசிதை: உபாயைர் விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா ததஸிந:
அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன், குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய். இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய். இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன், அதனை பெரியபிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்துவிடுவான். அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார். அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால், அவனே வராக புராணத்தில் - ந க்ஷமாமி - மன்னிக்கமாட்டேன் - என்றும், கீதையில் - மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் - என்று கூறியதையும் காண்க. அந்த நேரத்தில் இவள் நம்பெருமாளிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்? நமது குழந்தைகள் அல்லவா இவர்கள்? அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்”, என்று தடுக்கிறாள். இதுவே புருஷகாரத்தின் (புருஷகாரம் = சிபாரிசு செய்தல்) அடிப்படையாகும்.
பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) - தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் - என்பது காண்க.