Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 50)
Sri Guna Ratna Kosam
மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவார்த்ராபராதாஸ் த்வயா ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரண மித்யுக்தி க்ஷமௌ ரக்ஷத: ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவாகஸ்மிகீ
தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன் தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான். ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது. ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.
தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்; ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு, தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார். விபீஷணன் இராமனிடம் - த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: - எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் - என்றான். காகத்தின் வடிவில் வந்தவன் - த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: - மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் - என்றான். ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான். ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல், அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.