Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 44)

Sri Guna Ratna Kosam

ஆமோதாத்புத சாலி யௌவந தசா வ்யாகோசம் அம்லாநிமத் ஸௌந்தர்யாம்ருத ஸேக சீதலமிதம் லாவண்ய ஸூத்ரார்ப்பிதம் ஸ்ரீரங்கேச்வரி கோமலாங்க ஸுமநஸ் ஸந்தர்பணம் தேவி தே காந்தோர: ப்ரதியத்ந மர்ஹதி கவிம் திங்மாம் அகாண்டாகுலம்

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது திருமேனி ஒரு அழகிய மலர் மாலையாகவே உள்ளது. எப்படி என்றால் - உனது திருமேனி இயற்கையாகவே நறுமணம் வீசியபடி உள்ளது; என்றும் மாறாத யௌவனத்துடன் நீ உள்ளாய்; இதனால் நீ வாடாத மலர்கள் போன்று காட்சி அளிக்கின்றாய்; உனது அழகு என்பது பன்னீர் போன்று குளிர்ந்ததாக உள்ளது; உனது ஒளி என்பது மாலை கோர்க்கும் நூலாக உள்ளது; உனது திருமேனியில் உள்ள அழகான உறுப்புகள் அந்த மாலையின் மலர்கள் போன்று உள்ளன - ஆக நீ ஒரு மலர் மாலையாகவே உள்ளாய். இத்தகைய மலர்மாலை, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருமார்பை அலங்கரிக்க ஏற்றது. ஆஹா! தவறு செய்தேனே! அசுரர்களின் ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் கடினமான நம்பெருமாளின் திருமார்பிற்கு, மென்மையான உன்னை ஏற்றவள் என்று எப்படிக் கூறினேன்?

இங்கு ஸ்வாமி பராசரபட்டர் இறுதியில் தன்னையே சாடிக் கொள்கிறார். காரணம் என்ன? ச்லோகம் 42-ல், மலரின் மகரந்தப்பொடிகள் கூட இவளது திருவடிகளை உறுத்துகின்றன என்றார். அதே ச்லோகத்தில் தனது திருக்கரத்தில் வைத்துள்ள தாமரை மலரின் பாரம் தாங்காமல், திருக்கரம் துன்பப்படுவதாகக் கூறினார். இவ்விதம் மென்மையான இவளைப் பற்றிக் கூறிவிட்டு, இவள் கடினமான திருமார்பு உடைய நம்பெருமாளுக்கு ஏற்றவள் - என்று கூறிவிட்டேனே என வருந்துகிறார்.