Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 43)
Sri Guna Ratna Kosam
ஆமர்யாதமகண்டகம் ஸ்தநயுகம் நாத்யாபி நாலோகித ப்ரூபேத ஸ்மித விப்ரமா ஜஹதி வா நைஸர்கிகத்வாயச: ஸூதே சைசவ யௌவந வ்யதிகர: காத்ரேஷு தே ஸௌரபம் போகஸ்ரோதஸி காந்த தேசிக கர க்ராஹேண காஹ க்ஷம:
ஸ்ரீரங்கநாயகீ! உனது ஸ்தனங்கள் அதன் வளர்ச்சியை இப்போதும் தொடர்கின்றன. இதன் மூலம் நீ உனது யௌவனப் பருவத்தின் முதிர்ச்சியை அடையவில்லை எனத் தெரிகிறது. ஆனால் உனது திருக்கண்களின் பார்வை, புருவத்தின் நெறிப்பு, உனது கணவனான ஸ்ரீரங்கநாதனைக் கண்டு வீசும் புன்னகை ஆகியவற்றைக் காணும்போது நீ பூர்ண யௌவநம் அடைந்துவிட்டாய் எனத் தெரிகிறது. இப்படியாக நீ குமரிப் பருவத்திற்கும், யௌவநப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் மிகுந்த அழகுடன் அமர்ந்துள்ளாய். ஆனால் யௌவநம் முழுவதும் நிரம்பாமலேயே உன்னிடம் காணப்படும் புருவ நெறிப்புகள் முதலானவை உனக்கு ஒரு பழி போன்று ஆகிவிடும் அல்லவா (வயதிற்கு மீறிய செயலாக)? இப்படி உள்ள நீ, அந்தப் பருவதிற்கு ஏற்ப எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை உனக்கு ஆசிரியனாக, உனது கையைப் பிடித்து, ஆனந்தமாக உள்ள நேரங்களில் உனது கணவனான நம்பெருமாளே போதிப்பான் போலும். இப்படியாக குமரிப்பருவமும், யௌவநப்பருவமும் இணைந்த உனது அற்புதமான அழகு, மிகுந்த நறுமணத்தை உனது திருமேனியில் உண்டாக்குகிறது.
இங்கு நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆசானாக, குருபரம்பரையை ஒட்டி இருப்பதைக் கூறுகிறார். அவனுக்கு ஏற்ற இளமையுடன் இவள் உள்ளாள், இவளுக்கு ஏற்ற ஆண்மையுடன் அவன் உள்ளான்.