Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 42)

Sri Guna Ratna Kosam

பாதாருந்துதமேவ பங்கஜ ரஜ: சேடீ ப்ருசாலோகிதை: அங்கம்லாநிரதாம்ப ஸாஹஸ விதௌ லீலாரவிந்தக்ரஹ: டோலாதே வநமாலயா ஹரிபுஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம் கேந ஸ்ரீரதிகோமலா தநுரியம் வாசாம் விமர்தக்ஷமா

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ தோன்றிய தாமரை மலரின் மகரந்தத் துகள்கள், உனது திருவடிகளை உறுத்தக்கூடிய வகையில் மென்மையான பாதங்கள் கொண்டுள்ளாய். உனது தோழிகள் உன்னை உற்றுப் பார்த்தால், உனது மென்மையான திருமேனி, அவர்கள் கண்பட்ட இடங்களில் எல்லாம் வாடிவிடுகிறது. நீ விளையாட்டாக கைகளில் தாமரை மலரை எடுத்தால் உனது கைத்தலம் நோக ஆரம்பிக்கிறது (தாமரை மலரின் பாரம் தாங்காமல்). உனது நாயகனான நம்பெருமாளின் திருமார்பில் உள்ள வைஜயந்தி மாலையில் அமர்ந்து நீ ஊஞ்சல் போன்று ஆடினால், “ஆஹா! இதனால் இவளுக்கு என்ன துன்பம் விளையுமோ! இவள் திருமேனி அந்த மாலையால் வருந்துமோ?”, என்று சிலர் கூறுகின்றனர். இப்படிப்பட்ட மென்மையான உனது திருமேனி என் போன்றவர்கள் உன்னைப் புகழும் சொற்களால் கூட வாடிவிடக்கூடும் அல்லவோ?

நம்பெருமாளின் திருமேனியில் உள்ள மாலையில் அமர்ந்து இவள் ஆடினால், அதனால் இவள் திருமேனி எவ்விதம் வாடும்? அவன் எதிரிகளின் பாணங்கள் தாக்கப்பட்ட திருமார்பை உடையவனாக உள்ளான். அந்தக் காயங்கள் இவளது திருமேனியில் படும்போது உறுத்தக்கூடும் அல்லவா?