Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 36)

Sri Guna Ratna Kosam

அங்கம் தே ம்ருது சீத முக்த மதுரோதாரை: குணைர்கும்பத: க்ஷீராப்தே கிம் ருஜீஷதா முபகதா: மந்யே மஹார்காஸ்தத: இந்து: கல்பலதா ஸுதா மதுமுகா இத்யாவிலாம் வர்ணநாம் ஸ்ரீரங்கேச்வரி சாந்த க்ருத்ரிமகதம் திவ்யம் வபுர்நார்ஹதி

ஸ்ரீரங்கநாயகீ! திருப்பாற்கடலின் அரசன் என்ன செய்தான் என்றால் - சந்திரனின் அழகு மற்றும் குளிர்ச்சியை உனக்கு அளித்தான்; சந்திரனின் மென்மையையும் உனக்கு அளித்தான்; கற்பக மரத்தின் ஈகைத் தன்மையை உனக்கு அளித்தான்; அமிர்தத்தின் இனிமையை உனக்கு அளித்தான். இதனால்தான் சந்திரன், கற்பகம், அம்ருதம் முதலானவை சாறு பிழியப்பட்ட வெறும் சக்கை போன்று உள்ளன என்று நான் நினைக்கிறேன். இப்படி இருந்தாலும் இந்த உலகினரால் அவை பெரிதும் போற்றப்படுகின்றன. இப்படியான முரண்பாடுகள் நிறைந்த கவிஞர்கள் மூலமாக உனது திருமேனியை வர்ணிக்க இயலுமா? அந்த வர்ணனைகள் உனது திருமேனிக்குத் தகுதியாகாது அல்லவோ?

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனிக்கு பல தன்மைகள் கொடுத்த பின்னர், அந்தப் பொருள்கள் தங்கள் சாறை இழந்தன. ஆயினும் பல கவிஞர்கள், அவற்றை உயர்வாகவே போற்றுவதை முரண்பாடு என்றார். இதற்கு மற்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்வோரும் உண்டு. சந்த்ரன் முதலானவைகள் ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தங்கள் சிறப்புகளை அளித்த காரணத்தினால்தான் அவை இந்த உலகிலனரால் பெரிதும் போற்றப்படுகின்றன - என்பதாகும். இவ்விதம் பொருள் கொண்டால் - இயற்கையாகவே இந்தத் தன்மைகள் இல்லாதவள் ஸ்ரீரங்கநாச்சியார் - என்றாகி விடும் அல்லவா? இதனை உணர்ந்த பட்டர், இறுதி வரியில் - சாந்த க்ருத்ரிம கதம் திவ்யம் - செயற்கை என்பதே இல்லாத தெய்வீகமான திருமேனி - என்று முடித்தார். ஆக - அந்தப் பொருள்கள் மேன்மை பெற்றாலும், அவை உனக்கு அளிப்பதாகக் கூறப்படும் தன்மைகள், தெய்வீகமான உனது திருமேனிக்கு ஏற்கவல்லது அல்ல - என்பதாகும்.