Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 29)

Sri Guna Ratna Kosam

தவ ஸ்பர்சாதீசம் ஸ்ப்ருசதி கமலே மங்களபதம் தவ இதம் ந உபாதே: உபநிபதிதம் ஸ்ரீரஸியத: ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷு: ந சைவம் த்வாதேவம் ஸ்வதத இதி கச்சித் கவயதே

தாமரைமலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுக்கு “ஸ்ரீ” என்னும் மங்களச் சொல் அடைமொழியாக உள்ளது எப்படி? உனது தொடர்பு அவனுடன் உள்ளதால் அல்லவா? அந்த மங்களச் சொல் உனக்கும் அடைமொழியாக உள்ளது. ஆனால் அவ்வாறு அந்தச் சொல் உனது அடைமொழியாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லை - ஏனெனில் நீயே மங்களகரமான பொருளாகவே அல்லவா உள்ளாய்? ஒரு மலருக்கு நறுமணம் என்பது பெருமை அளிக்கிறது. ஆனால் அந்த நறுமணத்திற்கு வேறு எதனாலாவது பெருமை உண்டாகுகிறதா என்ன? எதனாலும் அல்ல. யாராவது ஒருவன் இந்த காரணத்தினால் நறுமணம் இப்படி உள்ளது என்று கூறுகிறானா?

நம்பெருமாளுக்கு மங்களம் என்பது ஸ்ரீரங்கநாச்சியார் உடன் இருப்பதால் மட்டுமே உண்டாகும். ஆனால் ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும், இயற்கையிலேயே மங்களகரமாக உள்ளாள். இவள் அருகில் உள்ளதாலேயே பெரியபெருமாளை ஸ்ரீரங்கநாதன் என்று கூறுகிறோம். இவள் அவன் அருகில் இல்லை என்றால், அவனை “ரங்கநாதன்” என்று மட்டுமே கூறுவோம். ஆக இவளால்தான் அவனது திருநாமத்திற்கும் ஏற்றம் என்று கருத்து.