Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 25)

Sri Guna Ratna Kosam

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரதுபரிபணா ரத்ந ரோசிர் விதாநம் விஸ்தீர்யாநந்தபோகம் ததுபரி நயதா விச்வமேகாத பத்ரம் தைஸ்தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாமஸங்க்யை: அந்யோந்யாத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் - அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது; அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது - இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான். அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான். அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன. இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்? இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய். நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள். இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

ஓர் ஆஸனத்திற்கு வேண்டிய தன்மைகளாவன மென்மை, நறுமணம், குளிர்ச்சி, பரப்பு, உயர்த்தி என்பதாகும். இவை அனைத்தும் ஆத்சேஷனிடம் உள்ளதாகக் கூறுகிறார். ஒன்றை ஒன்று பிரியாமல் உள்ள நிலைக்கு அத்வைத நிஷ்டை என்று பெயர். இதனை இங்கு கூறுவது காண்க. ஆக, நம்பெருமாள் இந்த உலகத்தைக் காத்து நிற்க, இவள் அவனுக்குத் துணையாக நிற்பதாகக் கூறினார்.