Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 22)

Sri Guna Ratna Kosam

ஹேலாயாமகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா: தந்யா: தே பரிசாரகர்மணி ஸதா பச்யந்தி யே ஸூரய: ஸ்ரீரங்கேச்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம் சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம் உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது. என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள, புண்ணியம் பல செய்தவர்களான நித்யசூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்) உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர். உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம். உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான். ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

இங்கு அனைத்தும் ஸ்ரீரங்கநாச்சியாருக்காவே உள்ளது என்று கூறுகிறார். நாம் அனைவரும் ஸர்வேச்வரனான நம்பெருமாளுக்கு அடிமை என்று பல சாஸ்த்ரங்களும் கூறும்போது, இவ்விதம் பட்டர் உரைப்பது எப்படிப் பொருந்தும்? இதற்கு நாம் பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த முமுக்ஷுப்படியின் 44 - ஆவது சூர்ணையின் மூலம் விடை பெறலாம். அவர் அந்தச் சூர்ணையில் அருளிச் செய்யும் கருத்து - ஒருவன் வேலைக்காரர்களைத் தனக்கு அடிமைகள் என்று ஓலை எழுதி வாங்கிக் கொள்ளும்போது, அந்த ஓலையில் அவர்கள் தனது மனைவிக்கும் அடிமைகள் என்று தனியாக எழுதுவதில்லை. ஆனால் அவர்கள் அவனது மனைவிக்கும் தொண்டு செய்கின்றனர். இது போல நாம் அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்றால், இவளுக்கும் அடிமை என்றே கருத்து.