Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 20)

Sri Guna Ratna Kosam

சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம் வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந் பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவாயாஸயந் ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேலயே

ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன? இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான். அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான். மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்? இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண்வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று, மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மனமகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

இங்கு நாம் தடுமாறும் பல நிலைகளைத் தெளிவாகக் காட்டுகிறார். முதலில் நாம் பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள் என்பதை மறக்கடிக்கிறான். இதுவே ஸம்ஸார கலக்கத்திற்கு முதல் படியாகும். அடுத்து, நம்மை உலக விஷயங்களில் ஆழ்த்துகிறான். இதன் மூலம் நம்மை ஸம்ஸாரக் கடலில் அழுத்துகிறான். மூன்றாவதாக சிற்றின்ப விஷயங்களில் தள்ளுகிறான். தூர்த்தர் என்னும் பதம் காண்க. இதன் பொருள் தனது மனைவியை விடுத்து, தன்னை நாடாத பெண்களின் பின்னே செல்பவன் என்பதாகும். இவ்விதம் திசை தெரியாமல் நடமாடும் நம்மைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியார் நகைத்துக் கொள்கிறாளாம்.