Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 19)
Sri Guna Ratna Kosam
காலே சம்ஸதி யோக்யதாம் சிதசிதோ: அந்யோந்யம் ஆலிங்கதோ: பூதாஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தீந்த்ரியை: அண்டாநாவரணை: ஸஹஸ்ரம் அகரோத் தாந் பூர்புவஸ் ஸ்வர்வத: ஸ்ரீரங்கேச்வரதேவி தே விஹ்ருதயே ஸங்கல்பமாந: ப்ரிய:
ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும் ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன. அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது. உடனே உனது ப்ரியமானவனான அழகியமணவாளன், அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு? உன்னை மகிழ்விக்க அன்றோ? அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து, மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான். அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான். மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.
ப்ரளயம் முடிந்து சேதனங்களும் அசேதனங்களும் ஒரே குவியலாக, இறகு ஒடிந்த பறவைகளாகக் கிடந்தன. இதனை ஸ்ரீ மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகையில் - கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற - என்று அருளிச்செய்தார். இவ்விதம் இவர்கள் கிடப்பதைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை அடைந்துவிடக் கூடாது என்று நம்பெருமாள் எண்ணினான். ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.