Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 17)

Sri Guna Ratna Kosam

ரதிர்மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய: ஸுதாஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா ததோ முகமதேந்திரே பஹுமுகீம் அஹம் பூர்விகாம் விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:

ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது புருவங்கள் கொடிபோன்றும், வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது. அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ, அந்த மனிதனின் நிலை என்ன? அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச்செழிப்பு, நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம் ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன. அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை - ஒவ்வொன்றும், “நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று போட்டி போட்டுக்கொண்டு வந்து சேர்கின்றன. இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் யார் மீது விழுகின்றதோ, அந்த மனிதனிடம் அனைத்தும் குவிகின்றன என்றார். இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) - யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே - எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று, “நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன - என்றார்.