Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 16)
Sri Guna Ratna Kosam
ஏகோ முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌலி: மநுஷ்ய: த்ருப்யத் தந்தாவலஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந் யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் அசரணோ தர்சயந் தந்த பங்க்தீ தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்
இந்த உலகின் நிலை என்ன? ஒரு மணிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு , முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான். அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது. அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான். மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும், அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?
இவளது திருக்கண்கள் மூடுவதாலும், திறப்பதாலுமே அனைத்து உயிர்களின் ஏற்றத்தாழ்வுகள் என்றார். இங்கு வாமன அவதார கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம் காண்போம். வாமனனாக ஸ்ரீமந்நாராயணன் மஹாபலியிடம் யாசகம் பெற வந்தான். இவன் எதனைக் கேட்டாலும் அதனை அளிப்பதற்கு மஹாபலி தயாராகவே இருப்பதாக உறுதி அளித்தான். இதனைக் கண்ட வாமனனுக்கு வியப்பு அதிகமானது. இவனிடம் இத்தனை ஐச்வர்யம் எவ்விதம் வந்தது என்று யோசித்தான். பின்னர் தன்னுடைய திருமேனியைப் பார்த்தான். ப்ரம்மச்சாரி என்பதால், தனது திருமார்பை அவன் மூடவில்லை. அதனால் அங்கு வாஸம் செய்யும் பெரியபிராட்டி மஹாபலியைப் பார்த்தபடி உள்ளதை அறிந்தான். அந்தப் பார்வையாலேயே அவனுக்கு அத்தனை ஐச்வர்யம் என்று அறிந்தான். தனது அங்கவஸ்த்ரத்தினால் திருமார்பை மூடிக்கொள்ள, அதனால் பெரியபிராட்டியின் நேர்பார்வை தடைபட்டது. இதன் விளைவாக வாமனன் கேட்ட மூன்றாவது அடியை மஹாபலியால் அளிக்க இயவில்லை. ஆக இவளது திருப்பார்வைக்கு இத்தனை சக்தி உண்டு என்று கருத்து.