Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 15)

Sri Guna Ratna Kosam

ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஆஸர்வ நிர்வாஹகாத் ஐச்வர்யம் யதிஹோத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே துங்கம் மங்கலமுஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம் தந்யம் யத் தததச்ச வீக்ஷணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ:

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக, அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள நான்முகன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள், இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் - இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை - எப்படி உண்டாகுகிறது? எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?

இங்கு ஸ்ரீரங்கநாதனை ஏன் கூறினார்? அனைத்தையும் படைப்பது அவனே என்பதால் ஆகும். அவ்விதம் அவன் படைத்தாலும், இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே அவை துளிர்க்கும் என்பதை முன்னரே கூறினார். ஒருவனுக்குப் பல பொருள்கள் திருவரங்கன் அருளால் கிட்டினாலும் - அவற்றை அனுபவிக்கக் கூடிய தகுதியையும், திறனையும், ஞானத்தையும் இவளே ஏற்படுத்துகிறாள்.