Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 12)
Sri Guna Ratna Kosam
மநஸி விலஸதாக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந ச்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா: நிதிமிவ மஹிமாநம் புஞ்ஜதே யேபி தந்யா: நநு பகவதி தைவீம் ஸம்பதம் தேபிஜாதா:
பகவானுடைய திருக்கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே! உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள். ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி? புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று , உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும். இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர். அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா? அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?
இங்கு கண் மை கொண்டு புதையலைத் தேடுவது போன்று, பக்தி என்பது கொண்டு ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றி வேதாந்தங்கள் என்ன கூறுகின்றன என அறியமுடியும். அந்த ஞானம் கொண்டு அவளை அறியலாம். அதன் பின்னர்? புதையலை எடுத்த பின்னர், அதனைக் கொண்டு ஆபரணம் செய்வது முதலான செயல்களைச் செய்து புதையலைப் பயனுள்ளதாக்குகிறோம். இது போன்று ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றிய ஞானம் உண்டான பின்னர், அவள் மூலமாக நம்பெருமாள் என்ற ஆபரணத்தைப் பெற்று விடுகிறோம்.