Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 11)

Sri Guna Ratna Kosam

ஆஹுர் வேதாநமாநம் கதிசன கதிசா ராஜகம் விச்வமேதத் ராஜந்வத் கேசிதீசம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணமந்யே பிக்ஷாவந்யே ஸுராஜம்பவமிதி ச ஜடா: தே தலாதல்யகார்ஷு: யே தே ஸ்ரீரங்க ஹர்ம்யாங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யமாஸந்

ஸ்ரீரங்கவிமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகீ! இங்கு பலவிதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர். அவர்கள் - வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம்பொருளைக் காண்பிக்கவில்லை என்றனர் (இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்); இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை); நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்); சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம்பொருள் உள்ள போதிலும் அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்); மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவமதம்) - இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது உண்மை.

இங்கு பல மதங்களின் வாதங்களைத் தள்ளுகிறார். இவர்களில் சிலர் வேதமே இல்லை என்பவர்கள் ஆவர். மேலும் சிலர் வேதங்கள் உள்ளதை ஒப்புக் கொண்டாலும், அவை பரம்பொருளைக் கூறவில்லை என்றனர். மேலும் சிலர் வேதங்களை ஒப்புக் கொண்டு, அவை பரம்பொருளையே குறிக்கின்றன என்று ஒப்புக் கொண்டாலும், அந்த பரம்பொருளுக்குக் குணங்கள் இல்லை என்றனர். இப்படிப்பட்டவர்கள் ஸ்ரீரங்கநாச்சியாரின் பார்வைக்கு இலக்காகாதவர்கள் என்றார். இவளது பார்வை ஒரு நொடிப்பொழுது பட்டிருந்தாலும், அவர்கள் மிக்க பண்டிதர்களாகி இருப்பார்கள் என்று கருத்து. ஆக இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே உண்மையான அறிவு பெற்று, பரம்பொருளான பெரியபெருமாளை அறிய இயலும்.