Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 10)
Sri Guna Ratna Kosam
தேவி ச்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ: த்வத் ஸத் குணௌக மணிகோச க்ருஹம் க்ருணந்தி தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய இனிமையான திருக்கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர். இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவுகோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் - இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் - என்பவை ஆகும்.
இந்தச் ச்லோகத்தின் மூலம் ஸ்ரீகுணரத்னகோசம் என்ற தலைப்பு வெளிப்பட்டத்தைக் காண்க. வேதங்கள் என்பவை இவளது குணங்களைக் காக்கும் பேழைகள் என்றார். ஆக மேலோட்டமாகப் பார்த்தால் வேதங்கள் பெரியபெருமாளைப் புகழ்வது போலத் தோன்றினாலும், ஆழ்பொருளில் இவளையே துதிக்கின்றன எனலாம். இவளது குணங்களை - ஒக - என்றார். இதன் பொருள், "கூட்டம் கூட்டமாக", என்பதாகும். அந்தக் குணங்களால் இவளுக்கு எந்தவிதமான புதிய ஏற்றம் வரப்போவதில்லை. ஆபரணங்களாலா தங்கத்திற்கு மதிப்பு? தங்கத்தால் அல்லவோ ஆபரணங்களுக்கு மதிப்பு? அது போல, இவளால் குணங்களுக்குப் பெருமை என்றார்.