Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 9)
Sri Guna Ratna Kosam
ச்ரிய: ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவ ச ஹ்ருத்யாம் பகவதீம் ச்ரியம் த்வத்தோப்யுச்சை: வயமிஹ பஹாம: ச்ருணுதராம் த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதர லதாரே ச்ரவணத: புந: ஹர்ஷோத்கர்ஷாத் ஸ்புடது ஜயோ: கஞ்சுகசதம்
உன்னை அடைய எங்களால் பற்றப்படுகின்ற ஸ்ரீரங்கநாயகியின் பதியே! ஸ்ரீரங்கநாதா! எங்கள் மனதிற்கு மட்டும் அல்ல, உனது மனதிற்கும் பிடித்த பல திருக்கல்யாண குணங்கள் கொண்டவளாக ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள். அவளது திருக்கல்யாண குணங்கள் காரணமாக உன்னை விட அவள் உயர்ந்தவள் என்று உன் முன்பாகவே கூறப்போகிறேன். இதனை உனது காதுகள் குளிர நீ கேட்க வேண்டும். நீ கேட்பதன் காரணமாக உனது கண்களில் மகிழ்ச்சி நிலை நின்று, அதனால் உனது பெரிய கண்கள் மின்னியபடி காணப்படும். இவற்றைக் கேட்பதன் மூலம் உனது அகண்ட திரண்ட தோள்கள் மகிழ்ச்சியின் காரணமாக மேலும் வளர வேண்டும். இதனால் அந்தத் தோள்களில் அணிவிக்கப்படும் பல அங்கிகளும் வெடித்துக் கிழிந்து போக வேண்டும்.
இங்கு பட்டர் பெரியபெருமாள் முன்பாக நின்றார். அவரிடம் பெரியபெருமாள், “நீவிர் நமது பிராட்டியைக் குறித்து துதி இயற்றி வருகிறீராமே! அவற்றில் அவளது திருக்கல்யாண குணங்கள் வெளிப்படும்படி புகழ்ந்துள்ளீர் அல்லவா?”, என்றான். பட்டர், “ஆம்! உம்மை விட அவள் பல குணங்களில் உயர்ந்தவள் என்றே புகழ்ந்துள்ளோம்”, என்றார். இதனைக் கேட்ட அழகியமணவாளன் கடகடவென்று சிரித்தான். தன்னுடைய நாயகியைக் குறித்து பட்டர் கூறப்போவதைக் கேட்க தன்னை மறந்து நின்றான். இதனைக் கண்ணுற்ற பட்டர் - ச்ருணு - கேட்பாயாக - என்ற பதம் பயன்படுத்தியது காண்க. பட்டர் கூறக்கூற அரங்கனின் திருக்கண்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன, அவனது திரண்ட புஜங்கள் மேலும் வளர்ந்தன. அவன் அணிந்திருந்த அங்கிகள் கிழிந்தன. இங்கு - ஹ்ருத்யாம் - என்ற பதம் காண்க. இதன் மூலம் பெரியபெருமாளின் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரைப் பட்டர் கூறுவதாகவும் கொள்ளலாம். எம்பெருமானும் பிராட்டியும் சேர்ந்து உள்ளபோது, பிராட்டியைப் புகழ்வது சரியா என்று சிலர் கேட்கலாம். இதற்கான சமாதானம் - பட்டராக இவற்றைக் கூறவில்லை, பெரியபெருமாள் கேட்டதனால்தான் கூறினார்.