Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 7)

Sri Guna Ratna Kosam

ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயமேவ லக்ஷ்மீ: ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை: வைதக்த்ய வர்ணகுண கும்பந கௌரவைர் யாம் கண்டூல கர்ண குஹரா: கவயோ தயந்தி

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்தச் ச்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக்கூடும். ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்தவிதமான முயற்சியும் செய்யவில்லை. அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள். இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள்பார்வை பொழிந்து நிற்கும். இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை, இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும். இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.

குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்டால் அல்லவோ தாய்க்கு மகிழ்வு ஏற்படும்? ஆகவே தனது சொற்கள் பிழையாகவே இருந்தாலும் அதனால் நன்மையே, நான் அதனைத் திருத்தப் போவதில்லை என்கிறார் - காரணம், அப்போதுதான் ஸ்ரீரங்கநாச்சியார் இதனைக் குழந்தையின் மழலைச் சொல்லாக ஏற்று மகிழ்வாள் என்றார். ஆனாலும் தன்னுடைய சொல்லானது நல்ல சொல் என்கிறார். இவரே பிழை உள்ளது என்று கூறிவிட்டு, இப்போது நல்ல சொல் என்பது எப்படி? இந்தச் சொற்கள் தாயாரைப் புகழ்வதால் நல்வாக்கு ஆனது. அடுத்து - மதுரை: கடாக்ஷை: - என்பது காண்க. இவளது பார்வை மிகவும் குளிர்ந்தது. இதனைக் கூறுவதற்கு முன்னால், இவளை ஸ்ரீரங்கராஜனின் மஹிஷி என்றது காண்க. இவ்விதம் கூறக் காரணம் - அரங்கனின் பார்வையானது சரிசமமானதாகும் - தண்டனை அளிப்பதாகவும், கருணை பொழிவதாகவும் அவனது பார்வை உள்ளது. ஆனால் இவள் பார்வை அப்படிப்பட்டது அல்ல என்று சுட்டிக் காட்டவே, அவனது மஹிஷி என்றார். இவள் பார்வையானது கருணையை மட்டுமே பொழியவல்லது.