Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 6)
Sri Guna Ratna Kosam
ஸ்தோதாரம் தமுசந்தி தேவி கவயோ யோ விஸ்த்ருணீதே குணாந் ஸ்தோதவ்யஸ்ய ததச்ச தே ஸ்துதி துரா மய்யேவ விச்ராம்யதி யஸ்மாத் அஸ்மதமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: தே குணா: க்ஷாந்த்யௌதார்ய தயாதயோ பகவதி ஸ்வாம் ப்ரஸ்துவீரந் ப்ரதாம்
ஸ்ரீரங்கநாயகீ! பகவானாகிய நம்பெருமாளுக்கு ஏற்றவளே! இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும், யார் ஒருவனை விரும்புவார்கள் என்றால் - எந்த ஒரு பொருள் துதிக்கத்தக்கதாக உள்ளதோ, ஆனால் அந்தப் பொருளின் குணங்களை முழுவதுமாக யாராலும் விவரிக்க இயலாமல் உள்ளதோ, அந்தப் பொருளை ஒருவன் அதன் குணங்களுடன் விவரித்தான் என்றால் - அவனையே பெரிதும் மதிப்பார்கள். இப்படிப்பட்ட அபூர்வமான பொருளாக இருக்கும் உன்னையும், உனது குணங்களையும் வர்ணித்துத் துதிபாடும் முழுத்தகுதியும் எனக்கே வந்து விட்டது, இது எப்படி என்றால் - நான் உன்னைத் துதிக்கும்போது எனது தாழ்மையான வாய் மூலமாக, பொருத்தம் இல்லாத சொற்கள் வந்து நிற்கும். ஆயினும் அதனை நீ மிகவும் மனம் மகிழ்ந்து கேட்டு நிற்பாய். இதன் மூலம் உனது உன்னதமான குணங்களான - குற்றங்களைப் பொறுத்தல், அந்தக் குற்றங்களையும் பெருந்தன்மையுடன் ஏற்பது, எனக்குச் சரியாகத் துதித்துக் கூற சொற்கள் அமையவில்லையே என்று நான் துன்பப்படுவதைக் கண்டு என் மீது வருத்தம் கொண்டு எனக்கு அருளுதல் (தயை) - ஆகியவை தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது அல்லவோ?
ஒரு பொருளைக் குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம். பலரும் அந்தப் பொருளைப் பற்றிக் கூற முயன்று, தோற்றுவிடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில், அந்தப் பொருளைப் பற்றி ஒருவன் துதிக்க, இதனைக் கேட்ட அந்தப் பொருள் தனக்கு உள்ள தன்மைகளை தானாகவே அனைவருக்கும் வெளிப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியெனில், அந்த ஒருவன் பலராலும் புகழப்பட வேண்டியவன் அன்றோ? அப்படிப்பட்டவன் யார் என்றால் - தானே (பட்டர்) என்கிறார். இதனைக் கேட்ட சிலர், “உம்முடைய சொற்களோ மிகவும் தாழ்ந்தவை. உனது வாயிலிருந்து சிறந்த சொற்கள் வெளிப்படவும் வாய்ப்பில்லை. இப்படி உள்ளபோது நீவிர் எவ்வாறு இவ்விதம் கூறுகிறீர்?”, என்றனர். இதற்குப் பட்டர் வெகு சாமர்த்தியமாக விடையளித்தார் - எனது சொற்கள் தாழ்ந்தவையே. அந்தச் சொற்கள் மூலமே ஸ்ரீரங்கநாச்சியாரின் பலவிதமான குணங்கள் தாமாகவே வெளிப்படுகின்றன: * அந்தத் தாழ்ந்த சொற்களால் புகழப்படும் ஸ்ரீரங்கநாச்சியார், அந்தத் தாழ்ந்த சொற்களையும் பொறுத்துக் கொள்கிறாள் அல்லவா? இதன் மூலம் அவளது க்ஷாந்தி குணம் - குற்றங்களைப் பொறுத்தல் - வெளிப்படுகிறது. * “இந்தக் குழந்தை தனது தாழ்ந்த சொற்கள் கொண்டு என்னைத் துதித்துவிட்டது என்று இதனை உலகம் பழிக்கக்கூடாது, என்னைத் துதிக்க இது மிகவும் தடுமாறுகிறதே”, என்று தனது மனதில் என் மீது இரக்கம் கொள்கிறாள். இதன் மூலம் அவளது தயை வெளிப்படுகிறது. * அந்தச் சொற்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவளது வாத்ஸல்யம் - குற்றத்தையும் குணமாகக் கொள்ளுதல் - வெளிப்படுகிறது. * இதனால் எனது சொற்களுக்கு அதிகமான மேன்மையை அளித்துவிடுகிறாள். இதனால் அவளது ஔதார்யம் வெளிப்படுகிறது. ஆக, எனது சொற்கள் கொண்டு அவளது குணங்களை நான் புகழ வேண்டிய அவசியம் இல்லை. எனது துதிகள், அவளது குணங்கள் தாமாகவே வெளிப்படக் காரணமாக உள்ளனவே - என்றார்.