Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 5)

Sri Guna Ratna Kosam

யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா ஸ்தோதும் கேவயம் இத்யதச்ச ஜக்ருஹு: ப்ராஞ்சோ விரிஞ்சாதய: அப்யேவம் தவ தேவி வாங்மநஸயோர் பாஷாநபிஜ்ஞம் பதம் காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை, அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத்தன்மை உடையது என்று உணர்ந்து, அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது? பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற நான்முகன் முதலானோர், உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர். ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம்மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர். இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன. இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான், முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்.

வேதங்கள் ஸ்ரீரங்கநாதனின் பெருமையைக் கூறிவிடலாம் என்று முயன்றாவது பார்த்தன. ஆனால் இவளது பெருமைகளை நம்மால் நிச்சயம் கூற இயலாது என்று முயற்சி செய்யவும் அஞ்சின. இங்கு “இவளது பெருமைகளைக் கூறும் திறன் யாருக்கு உள்ளது”, என்று கூறாமல், “இவளது பெருமைகளைக் கூற யாருக்கு விருப்பம் உள்ளது”, என்று ஏன் கூறவேண்டும்? ஒரு செயலைச் செய்ய இயலாது என்று பலரும் ஒதுங்கியிருக்க, ஒருவன் மட்டும் தன்னால் முடியும் என்று வருகிறான் என வைத்துக் கொள்வோம். அவன் தோற்றால் மிகுந்த அவமானம் அல்லவா? அது போன்று வேதங்களே ஒதுங்கிக் கொண்ட நிலையில், இவளைப் பற்றி நான் கூறுகிறேன் என்று வந்துவிட்டு, பின்னர் அனைவரும் பரிகசிக்கும் நிலையை யாராவது விரும்புவார்களா? இதனால்தான் “விருப்பம்” என்றார். இவ்விதம் கூறிவிட்டு நன்கு படித்த இவரே (பட்டர்), இவளைப் புகழ்ந்து பாட முயல்வது எப்படி என்று ஒரு சிலர் கேட்கலாம். இதற்கான விடையை இவர் கூறும்போது - இவளது கருணையால் தனது சொற்களுக்கு நன்மை ஏற்பட்டுவிடும், அதனால் தனது கவிதைகளும் ஏற்கப்பட்டுவிடும் - என்று கூறினார். இவருக்கு இந்த நம்பிக்கை எப்படி வந்தது? இவர் ச்லோகம் இயற்றத் தொடங்கியதைக் கண்ட ஸ்ரீரங்கநாச்சியார், “யாரும் செய்யத் துணியாத செயலை இந்தக் குழந்தை செய்கிறது. நாம் ஆதரிப்போம்”, என்று எண்ணி, தன்னைக் கடாக்ஷிப்பாள் என்றார்.