Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 4)

Sri Guna Ratna Kosam

யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தாரதம்யே முராரே: வேதாந்தா: தத்வசிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்நைஸ்தரந்தி போகோ போத்காத கேலீ சுலகித பகவத் வைச்வரூப்யாநுபவா ஸா ந: ஸ்ரீராஸ்த்ருணீதாம் அம்ருத லஹரிதீ லங்கநீயைரபாங்கை:

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும். இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ, ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான். யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன. ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்பட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும். இவளது திருக்கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் - ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது. இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது. அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

ஒவ்வொரு உயிரைப் படைத்த பின்னர் ஸ்ரீரங்கநாதன் இவளது திருமுகத்தைப் பார்க்கிறான் - இந்தப் பார்வையின் பொருள், “இந்த உயிரை எவ்விதம் படைக்கவேண்டும் என்று எனக்குக் குழப்பமாக உள்ளது, நீயே தெளிவுபடுத்துவாயாக”, என்பதாகும். இதனைப் புரிந்துகொள்ளும் இவள் தனது புருவத்தின் நெறிப்பு மூலம், “இந்த உயிரை புகழ் பெறும் வகையில் படை, இந்த உயிரை ஞானம் உள்ளதாகப் படை, இந்த உயிரை தாழ்ந்ததாகப் படை” என்று உணர்த்துகிறாள். இவனும் அப்படியே செய்துவிடுகிறான். இவளிடம், “ஏன் இவ்விதம் படைக்கச் சொல்லுகிறாய்?”, என்று அவன் கேட்பது கூட இல்லை - காரணம் அவளுக்கு அவன் அத்தனை ப்ரியமானவனாக வசப்பட்டு நிற்கிறான். வேதம் இல்லாமல் ப்ரம்மனால் படைக்க இயலாதது போல, இவளது புருவ நெறிப்பு இல்லாமல் ஸ்ரீரங்கநாதனும் ஏதும் செய்வதில்லை. இங்கு முராரி என்று நம்பெருமாளைக் கூறியது காண்க. படைத்தல் குறித்துக் கூறும்போது ஏன் “அழித்தவன்” என்னும் திருநாமம் கொண்டு (முரன் என்ற அசுரனை அழித்தவன்) கூறவேண்டும்? அழிக்கும் வல்லமை இருந்தாலும், படைக்கும்போது மிகவும் எளியவனாக இவள் வசப்பட்டு நிற்பதை உணர்த்துகிறார்.