Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 3)

Sri Guna Ratna Kosam

அநுகல தநுகாண்டாலிங்கநாரம்ப சும்பத் ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸகா நோக ஹர்த்தி: ஸ்தநநயந குளுச்ச ஸ்பாரபுஷ்ப த்விரேபா ரசயது மயி லக்ஷ்மீ கல்பவல்லீ கடாக்ஷாந்

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள். இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று, அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன. இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க்கொத்துக்கள் போன்று உள்ளன. அந்த மலர்ச்செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள். இப்படி உள்ளவள் யார் என்றால் - லக்ஷ்மீ கல்பவல்லீ - என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள். அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

இங்கு ஸ்ரீரங்கநாதனை, ஸ்ரீஸக என்று கூறியது காண்க - ஸ்ரீயின் நாதன் என்னும்படி, அவள் இல்லாமல் இவனை அடையாளம் காண இயலாது என்பதைக் காட்டுகிறார். அவள் இல்லாமல் இவனது திருக்கல்யாண குணங்கள் வெளிப்படாமல் உள்ளதோடு, தேயவும் செய்துவிடும்.