Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 2)
Sri Guna Ratna Kosam
உல்லாஸ பல்லவிதபாலித ஸப்தலோகீ நிர்வாஹ கோரகித நேம கடாக்ஷ லீலாம் ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கல தீப ரேகாம் ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ச்ரியமாச்ரயாம:
இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக்கண்களைத் திறந்து பார்க்கிறாள். அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன (கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன). இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல. இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள் (ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன? தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித்தருகிறாள். இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் - ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் - என்றார். பெரியபெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் . மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.
இங்கு பல்லவித என்னும் பதம் உலகமானது துளிர்கிறது என்று நேரடியாகப் பொருள் தரவில்லை. பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பது போன்று எனக் கருத்து. இவள் தனது திருக்கண்களைத் திறந்து பார்ப்பதை, பெரியபெருமாள் கவனித்தவுடன் இந்த உலகைப் படைக்கிறான். இவள் தனது கண்களை மூடிக்கொண்டால், இந்த உலகத்தைப் ப்ரளயத்தில் ஆழ்த்திவிடுகிறான். பரம்பொருளே உலகின் காரணம் என்று வேதங்களும் வேதாந்தங்களும் முழங்க, இவர் பெரியபிராட்டியைக் காரணமாகக் கூறுவது எப்படி? அவனே அதற்குக் காரணம் என்பது உண்மை, ஆனால் இவளது துணையின்றி அது இயலாது. இந்த உலகம் என்னும் இல்லறம் நடக்க, மனைவியாகிய இவள் துணை மிகவும் அவசியமானது என்று கருத்து. இவளே பெரியபெருமாளை நமக்குக் காண்பித்துத் தருகிறாள். அவனிடம் செல்ல இவளது சிபாரிசு (புருஷகாரம்) தேவை. ஆனால், இவளை அடைவதற்கு எந்த ஒரு சிபாரிசும் தேவை இல்லை. தானே தனக்குச் சிபாரிசாக உள்ளாள்.