Sri Paduka Sahasram - Paththati 27 - ரேகா பத்ததி (ச்லோகம் 814)
Paththati 27 - ரேகா பத்ததி
ரேகயா விநமதாம் திவௌகஸாம் மௌளிரத்ந மகரீ முக உத்தயா பாதுகே வஹஸி நூநம் அத்புதம் சௌரிபாத பரிபோக லக்ஷணம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை வணங்கி நிற்கும் தேவர்களின் க்ரீடங்களில் காணப்படும் இரத்தினங்களால் செய்யப்பட்ட மீனின் முகத்தினால் உன் மீது கோடுகள் ஏற்படுகின்றன. இதனைக் காணும்போது நீ ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடன் சேர்ந்து அனுபவித்த இன்பத்தின்போது அந்த அடையாளத்தை ஏற்றாய் போலும்.
தேவர்களின் தலையில் உள்ள க்ரீடங்களின் மீன் வடிவ நகைகள் உண்டு. அவை பாதுகைகள் மீது மீன் வடிவத்தில் அச்சு உண்டாக்குகின்றன. ஸ்ரீரங்கநாதனின் திருவடியில் மகர உருவம் உண்டு. அந்தத் திருவடியை நாயகன் என்றும், பாதுகையை நாயகி என்றும் கொண்டால், இவர்கள் சேர்ந்துள்ளபோது திருவடியின் அரவணைப்பு காரணமாக அந்த மகர வடிவம் பாதுகையில் வந்ததோ என்கிறார். உண்மையில் அவை தேவர்களின் க்ரீடங்களால் வந்தவை ஆகும்.