Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 612)

Paththati 18 - முக்தா பத்ததி

தவ ரங்கதுரீண பாதரக்ஷே விமலா மௌத்திக பத்ததி: விபாதி ஸுஹ்ருதி த்வயி ஸாதித அபவர்க்கை: ஸமயே ஸங்க்ரமிதேவ ஸாதுக்ருத்யா:

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தூய்மையாக உள்ள உனது முத்துக்களின் வரிசை வெண்மையாகக் காணப்படுகிறது. இதனைக் காணும்போது, மோக்ஷம் பெற்றவர்கள், மோக்ஷம் செல்லும் நேரத்தில் மிகவும் அன்புடன் உன்னிடம் அளித்துவிட்டுச் சென்று அவர்களது புண்ணியங்கள் போன்று உள்ளன.

மோக்ஷம் செல்பவர்கள் தங்கள் பாவ புண்ணியங்களைக் கைவிட்ட பின்னரே மோக்ஷம் செல்கிறார்கள். சாட்யாயநசாகையில் – தஸ்ய புத்ரா தாயம் உபாஸந்தி ஸுஹ்ருத ஸாதுக்ருத்யாம் த்விஷந்த: பாபக்ருத்யாம் – மோக்ஷம் செல்லும் உபாஸகனின் புத்திரர்கள் அவனது செல்வத்தையும், நண்பர்கள் புண்ணியத்தையும், பகைவர்கள் பாவத்தையும் அடைகின்றனர் – என்று கூறியது. இங்கு மோக்ஷம் செல்பவர்களின் நண்பனாக பாதுகை உள்ளதால், அவர்களின் புண்ணியங்கள் பாதுகையிடம் சேர்ந்து விடுகின்றன. புண்ணியத்தின் நிறம் வெண்மை என்பதால், அவை முத்துக்கள் போன்று உள்ளன என்றார்.