Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 599)

Paththati 17 - பத்மராக பத்ததி

பத்மா கர அந்தர விகாஸிநி ரங்கபர்த்து: பீத்வா பதாவநி மதூநி பதாரவிந்தே சோணோபல த்யுதி மயீம் ஸுபக ப்ரசாராம் மந்யே பிபர்ஷி மஹதீம் மதராக சோபாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் திருக்கரங்கள், தாமரைத் தடாகம் போன்று உள்ளன. அங்கு ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகள் மலர்ந்து காணப்படுகின்றன. அந்தத் தாமரையில் பெருகி நிற்கும் தேனைப் பருகிய நீ, மிகவும் வேகமும் அழகும் கூடிய நடையைக் கொண்டவளாகிறாய். கள் குடித்தவன் முகம் முழுவதும் சிவந்து காணப்படுவது போன்று, உனது பத்மராகக் கற்கள் சிவந்து காணப்பட்டு, உனது அழகை மேலும் கூட்டுகிறது என்று நான் எண்ணுகிறேன்.

இங்கு நம்பெருமாளின் திருவடித் தாமரைகளில் பெருகும் மதுவைப் பாதுகை குடித்து, அதனால் கள் குடித்தவன் போன்று வேகமாக நடப்பதாகக் கூறுகிறார். மதுவைப் பருகியவன் சிவந்த நிறம் கொண்டு இருப்பது போன்று, பாதுகையும் பத்மராகக் கற்களின் ஒளியால் சிவந்துள்ளாள் என்றார்.