Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 530)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

தாபத்ரயம் நிருந்தே பசதி கஷாயாந் விசோஷயதி பங்கம் தேஜஸ்த்ரிதயம் இதம் தே சங்கே ரங்கேந்த்ர பாதுகே தேஜ:

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! சந்திரன், சூரியன் மற்றும் அக்னி ஆகிய மூன்றும் சேர்ந்தது போன்று உனது ஒளி உள்ளது. இந்த ஒளியானது - மக்களின் மூன்று விதமான துன்பங்களையும் நீக்குகிறது; மனதின் அறியாமையை எரித்து விடுகிறது; பாவங்களை உலர வைக்கிறது. இப்படியாகவே உனது ஒளி உள்ளதாக நான் எண்ணுகிறேன்.

மூன்று விதமான துன்பங்கள் என்பது ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம் மற்றும் ஆதிபௌதிகம் என்பதகும். இதில் ஆத்யாத்மிகம் என்பது உடலில் உண்டாகும் நோய் போன்றவை; ஆதிதைவிகம் என்பது மழை, காற்று போன்ற இயற்கை அழிவுகள்; ஆதிபௌதிகம் என்பது மற்றவர்களால் ஏற்படும் துன்பங்கள் ஆகும். பாதுகையின் ஒளியானது இவற்றை நீக்குவதால் சந்திரன்; அறியாமையை எரிப்பதால் அக்னி; பாவங்களை உலர்த்துவதால் சூரியன் என்று கொள்ள வேண்டும்.