Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 520)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

பவத்யந்தே த்வம் ப்ரணதஸ்ய ஜந்தோ: ததோகோ: அக்ரஜ்வலநம் த்வத் ப்ரகாசை: யதோ நாட்யா மத்யமயா விநிர்யந் கதிம் விந்தேத் கேசவ பாதரக்ஷே

அழகான கேசங்களைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னை ஆராதித்தபடி உள்ள மனிதனின் இதயம் என்ற பகுதியானது, அந்திம நேரத்தில் உன்னுடைய இரத்தினங்களின் ஒளி மூலமாக மிகவும் பிரகாசமாக உள்ளது. இந்த வெளிச்சம் காரணமாக, அதன் நடுவில் உள்ள நாடி மூலம் வெளியே கிளம்பும் ஜீவன், அர்ச்சிராதி மார்க்கத்தை அடைகிறான்.

இதயத்தில் இருந்து பல நாடிகள் தலைக்குச் செல்கின்றன. அவற்றில் ஒன்று மட்டும் உச்சந்தலைக்குச் செல்கிறது. இதற்கு ஸுஷும்நா நாடி என்று பெயர். இந்த நாடி வழியே வெளிக்கிளம்பும் ஜீவன் மட்டுமே அர்ச்சிராதி மார்க்கமாக, ஸ்ரீவைகுண்டம் அடைகிறான். பல நாடிகள் இதயத்தில் உள்ளதால், வெளிக்கிளம்பும் ஜீவனுக்கு இந்த குறிப்பிட்ட நாடி எது என்று அறிவதற்கு, பாதுகையின் இரத்தினக்கற்கள் ஒளியிட்டுக் காண்பிக்கின்றன என்றார்.