Sri Paduka Sahasram - Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி (ச்லோகம் 491)

Paththati 15 - ரத்ந ஸாமாந்ய பத்ததி

நாதஸ்ய தத்தே நதராஜகந்யா பாதும் சுபாந் பாத நக இந்து ரச்மீந் மணிப்ரபாபி: ப்ரதிபந்ந பக்ஷாம் லீலாசகோரீம் இவ பாதுகே த்வாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளின் நகக்கண்கள் சந்த்ரன் போன்று குளிர்ந்த வெண்மையான ஒளியை வீசுகின்றன. நதிகளின் தலைவனாகிய ஸமுத்திரராஜனின் புத்ரியான ஸ்ரீரங்கநாச்சியார், சிறந்த இரத்தினங்களின் ஒளியை வீசுகின்ற உன்னை, தான் விளையாட வைத்துள்ள சகோரபக்ஷி போன்று அவனது திருவடிகளில் அணிவிக்கிறாள்.

சகோர பக்ஷி என்பது சந்திரனின் குளிர்ந்த ஒளியை மட்டுமே உண்ணும் தன்மை கொண்டதாகும். இங்கு பாதுகையை இந்தப் பறவைக்கு உருவகம் செய்கின்றார். இந்தப் பாதுகை என்ற பறவையை, ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்கள் என்னும் சந்த்ரனில் இருந்து வெளிவரும் ஒளியைப் பருகும் பொருட்டு, ஸ்ரீரங்கநாச்சியார் அணிவிக்கிறாள் என்றார்.