Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 478)

Paththati 14 - நாத பத்ததி

த்வத் சிஞ்ஜாரவ சர்க்கரா ரஸ ஸதாஸ்வாதாத் ஸதாம் உந்மதா மாத: மாதவ பாதுகே பஹுவிதாம் ப்ராய: ச்ருதி: முஹ்யதி ஸாராஸார ஸக்ருத் விமர்சந பரிம்லந அக்ஷர க்ரந்திபி: க்ரந்தை: த்வாம் இஹ வர்ணயாமி அஹம் அத: த்ராஸ த்ராபா அபவர்ஜித:

ஸ்ரீரங்கநாச்சியாரைத் திருமார்பில் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! பல சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களின் காதுகள், அவற்றை விட மிகவும் இனிமையானதும், சர்க்கரைப்பாகு போன்றதும் ஆகிய உனது நாதத்தின் சுவையை விடாமல் பருகி, மயக்கம் அடைந்து நிற்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட நான், எவ்விதமான அச்சமோ அல்லது நாணமோ இல்லாமல், ”இந்தச் சொற்கள் நல்லவையா தகாதவையா”, என்று மீண்டும் ஒருமுறை ஆராயாமல், எழுத்துக்களின் சேர்க்கை கொண்ட ச்லோகங்களால் உன்னைத் துதித்து விடுகிறேன்.

இங்கு “விமர்சந பரிம்லாந” என்ற பதத்திற்கு – ”மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல்” , “ விமர்சிக்க முயன்றாலே வாடிவிடும் சொற்கள்” - என்று இரு பொருள் கொள்ளலாம். முதல் பொருளில் மேலே உள்ள கருத்து உள்ளது. இரண்டாவது பொருளில் – தன்னுடைய எழுத்துக்கள் மிகவும் அற்பமானவை என்றும், அவற்றை ஒருமுறை யாராவது விமர்சிக்க முயன்றாலே அவை வாடிவிடும்படியான தன்மை கொண்டவை என்றும் கூறுவதாகக் கொள்ளலாம்.