Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 125)

Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி

அவ்யாஹதாம் ரகுபதேர் வஹத: ப்ரதிஜ்ஞாம் அம்சாதிரோஹண ரஸே விஹதே தரண்யா: ப்ராதாந் நிவ்ருத்ய பவதீ மணிபாதரக்ஷே ஸ்பர்சம் பதே ந விகத வ்யவதாந கேதம்

இரத்தினக்கற்கள் இழைத்த பாதுகையே! பூமாதேவி இராமனின் தோளில் ஏறுவதற்கு பெருமுயற்சி எடுத்தாள். ஆயினும், தான் கானகம் செல்வேன் என்ற சபதத்தில் இராமன் இருந்ததால், அந்த விருப்பம் நிறைவேறவில்லை. இவ்வாறு அவள் மகிழ்வு போக்கடிக்கப்பட்டது. அப்போது நீ அயோத்திக்குத் திரும்பினாய். இதன் மூலம் பூமாதேவிக்கு இராமனின் திருவடித் தொடர்பை ஏற்படுத்தி, இழந்த மகிழ்வை மீண்டும் கொணர்ந்தாய்.

தசரதன் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யப்போவதாக அறிவித்தவுடன் பூமாதேவி மிகவும் மகிழ்ந்தாள். தான் இராமனின் தோள்களில் அமர வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்ந்தாள் (ஒரு நாட்டு அரசன் அந்த நாட்டைத் தனது தோள்களில் வைத்துக் காப்பதாகவே கூறுவர்). ஆனால் இராமன் கானகம் சென்றதால், பூமாதேவியின் அந்த மகிழ்ச்சி பறிபோனது. இதனைப் பார்த்த பாதுகை பூமாதேவி இழந்த மகிழ்வை மீண்டும் பெறும் விதமாக, இராமனின் திருவடிகளை விட்டு அகன்றாள். இதன் மூலம், இராமனின் திருவடிகள் நேரடியாகப் பூமியில் பட, பூமாதேவிக்கு அவனது திருவடித் தொடர்பு கிட்டியதால் மகிழ்ச்சி உண்டானது.அல்லது, இராமனின் ஸிம்ஹாஸனத்தில் பாதுகை அமர்ந்து ஆண்டதால், பூமாதேவி மீண்டும் மகிழ்ச்சி அடைந்தாள் என்றும் பொருள் கொள்ளலாம்.