Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 123)

Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி

தசவதந விநாசம் வாஞ்சத: யஸ்ய சக்ரே தசரதம் அநகோக்திம் தண்டகாரண்ய யாத்ரா ஸ ச பரத விமர்த்தே ஸத்ய ஸந்த: த்வயா ஆஸீத் ரகுபதி பதரக்ஷே ராஜதாநீம் ப்ரயாந்த்யா

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராவணனை வதம் செய்யும் விருப்பம் கொண்டிருந்த இராமன், தண்டகாரண்யம் என்ற கானகம் புகுந்தான். இதன் மூலம் தசரதனின் வாக்கு சத்யவாக்கே என்று நிலைத்தது. இது போன்று பரதன் இராமனை அயோத்தி திரும்புமாறு வற்புறுத்தினான். அப்போது இராமன் பரதனிடம் உன்னை அளித்தான். நீ அயோத்திக்குப் புறப்பட்டதன் மூலம், "மக்களைக் காப்பேன்", என்ற இராமனின் சத்தியமும் நிலைத்தது.

இராமன் கானகம் சென்றதால், தசரதனின் வாக்கு நிறைவேற்றப்பட்டது. இராமனுக்குத் தனது நாட்டு மக்களைக் காப்பாற்றும் கடமை இருந்தது. பாதுகைகளை அவன் மீண்டும் அனுப்பியதன் மூலம் அவனது வாக்கும் காப்பாற்றப்பட்டது. ஆக, தசரதனின் வாக்கை இராமன் காப்பாற்றினான், இராமனின் வாக்கை பாதுகை காப்பாற்றினாள்.