Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 117)
Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி
ரகுபதி பதபத்மாத் ரத்னபீடே நிவேஷ்டும் பரத சிரஸி லக்நாம் ப்ரேக்ஷ்ய பாதாவநி த்வாம் பரிணத் அபுருஷார்த்த: பௌரவர்க்க: ஸ்வயம் தே விதிம் அபஜத ஸர்வ: வந்தி வைதாளிகாநாம்
பாதுகையே! இராமனின் தாமரை போன்ற திருவடிகளில் இருந்து, உயர்ந்த இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட ஸிம்ஹாசனத்தில் அமர்வதற்கு நீ புறப்பட்டாய். பரதன் உன்னைத் தனது தலையில் ஏற்றுச் சென்றான். அப்போது அனைத்து மக்களும் தங்களுக்கான நான்கு புருஷார்த்தங்களும் (தர்ம, அர்த்த, காம, மோக்ஷ - அறம், பொருள், இன்பம், வீடு) தங்கள் கைகளில் கிட்டிவிட்டதாகவே எண்ணினர். உன்னைப் புகழ்ந்து துதித்தபடி நின்றனர்.
பெருமாளோ அல்லது அரசனோ ஓர் ஆசனத்திலிருந்து மற்றோர் ஆசனத்திற்குச் செல்லும்போது, கட்டியம் கூறுவது வழக்கமாகும். இங்கு பாதுகை முதலில் இராமனின் திருவடிகளில் இருந்து, பரதனின் தலையில் எழுந்தருளினாள். பின்னர், அயோத்தியில் ஸிம்ஹாஸனத்தில் எழுந்தருள வந்தபோது, அந்த நாட்டு மக்கள் கட்டியம் கூறியபடி நின்றனர்.