Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 103)

Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி

ப்ராப்தே ப்ரயாண ஸமயே மணிபாதரக்ஷே பௌரான் அவேக்ஷ்ய பவதீ கருண ப்ரலாபாந் மஞ்ஜுப்ரணாத முகரா விநிவர்த்தநார்த்தம் ராமம் பதக்ரஹண பூர்வம் அயாசதேவ

உயர்ந்த இரத்தினக்கற்கள் கொண்டு பதிக்கப் பெற்ற பாதுகையே! இராமன் காட்டிற்குக் கிளம்பியபோது அயோத்தி மக்கள் அனைவரும் மிகவும் வருத்தம் கொண்டு புலம்பியபடி நின்றனர். அந்த நேரத்தில் உன்னில் பதிக்கப்பட்ட கற்கள் ஓசை எழுப்பின. அந்த ஓசை எவ்விதம் இருந்தது என்றால் - நீ இராமனின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டு, “இந்த மக்களைக் காக்கும் பொருட்டு என்னை மீண்டும் அயோத்திக்கு அனுப்பவேண்டும்”, என்று கேட்பது போன்று இருந்தது.

தன்னைக் கெஞ்சும் மக்களைக் கண்டு இராமன் நெகிழாமல், தனது உறுதி குலையாமல் நின்றான். ஆனால், பாதுகையோ மக்களின் நிலை கண்டு துடித்துப் போனது. இராமனின் திருவடிகளைப் பிடித்தபடி, “என்னைப் பரதனுடன் மீண்டும் இவர்களுக்காக அனுப்புவாயா?”, என்று கேட்பது போன்று, அதனுள் இருந்த இரத்தினக்கற்கள் ஒலித்தன.