Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 86)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
ஸ்தைர்யம் குலக்ஷோணி ப்ருதாம் விதத்ஸே சேஷாதய: த்வாம் சிரஸா வஹந்தி பதப்ரஸூதா பரமஸ்ய பும்ஸ: ப்ருத்வீ மஹிம்நா மணிபாதுகே த்வம்
உயர்ந்த இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! உயர்ந்த குலத்தில் பிறந்த அரசர்கள் தங்கள் பதவியில் நிலையாக உள்ளதற்கு நீயே காரணமாக உள்ளாய். உன்னைத் தங்கள் தலையில் ஆதிசேஷன் போன்றவர்கள் ஏற்கின்றனர். நீ பரமபுருஷனாகிய நம்பெருமாளின் திருவடிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளாய். இப்படிப்பட்ட பல பெருமைகள் மூலம் பருத்துள்ளாய் போலும்.
கடந்த ச்லோகம் போன்றே இங்கும் பாதுகைக்கு பூமியின் தன்மைகளை ஸ்வாமி தேசிகன் ஏற்றிக் கூறுவதைச் சற்று காணலாம். பூமி குல பர்வதங்களை அசையாமல் வைத்துள்ளது; ஆதிசேஷனால் தாங்கப்படுவது; எம்பெருமானின் திருவடிகளிலிருந்து வெளிப்பட்டது (புருஷ ஸூக்தம் காண்க) - இதே தன்மைகளைப் பாதுகைக்கும் கூறியது காண்க.