Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 80)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
சூடா கபால வ்யதிஷங்க தோஷம் விமோசயிஷ்யந்நிவ விஷ்ணுபத்யா: க்ருத ஆதர: கேசவ பாதரக்ஷே பிபர்த்தி பாலேந்து விபூஷண: த்வாம்
அழகான கேசம் கொண்ட க்ருஷ்ணனின் திருவடிகளைக் காக்கின்ற பாதுகையே! அழகான சந்திரனைத் தலையில் ஆபரணம் போன்று சூடியுள்ள சிவனின் தலையில், ப்ரம்மனின் அசுத்தமான மண்டை ஓடும் உள்ளது. இதனால் சிவனின் தலையில் உள்ள கங்கையும் அசுத்தமாகிறது. இந்த அசுத்தத்தை நீக்கவே சிவன் உன்னைத் தனது தலையில் வைத்துக் கொண்டு மகிழ்வு கொள்கிறார் போலும்.
சிவன் தனது தலையில் பாதுகையை ஏற்றது எதற்காக? தான் ப்ரம்மனின் தலையைத் துண்டித்த பாவமானது, பாதுகையைத் தரித்தால் நீங்கும் என்பதாலா? அல்ல. பின்னர் எதற்கு? ப்ரம்மனின் மண்டை ஓடு சிவனின் தலைக்கு வந்து சேர்ந்தவுடன், அங்கிருந்த கங்கையானது தனது மனதில், “நாம் த்ரிவிக்ரமனின் திருவடி ஸம்பந்தம் பெற்றோம். அதனால் நம்மிடம் வருபவர்களின் பாவங்களை நீக்கலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால், இவ்விதம் புதிய அசுத்தம் வந்துவிட்டதே”, என்று வருத்தம் கொண்டாளாம். இந்த வருத்தத்தை உணர்ந்த பாதுகையானது, அந்த வருத்தம் நீங்கும் விதமாக சிவனின் தலையில் அமர்ந்தாள் என்று கருத்து.