Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 61)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

யத் அத்வரபுஜாம் சிர: பதயுகம் ச ரங்கேசிது: த்ருடம் கடயிதும் க்ஷமம் பவதி சேஷ சேஷித்வத: சிரஸ்த்ரம் இதம் அஸ்து மே துரிதஸிந்து முஷ்டிந்தயம் கதத்வ விஹதி க்ஷமம் கிம் அபி தத் பதத்ரத்வயம்

இந்த இரண்டு பாதுகைகளும் தேவர்களுடைய தலைகள் மற்றும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் ஆகியவற்றுக்குப் பெருமை சேர்க்கிறது; பெருமை அடைகிறது - அதாவது தேவர்களின் தலைக்குப் பெருமை சேர்க்கிறது, ஸ்ரீரங்கநாதனின் திருவடிச் சேர்க்கையால் தான் பெருமை அடைகிறது. மேலும் பாவங்கள் அனைத்தையும் தனது ஒரே பிடிக்குள் அடக்கி விடுகிறது. இதனால் தீய வழிகளில் செல்வது தடுக்கப்படுகிறது. இப்படியாக இன்ன பெருமைகள் என்று கூற இயலாத பல பெருமைகள் கொண்டதாக உள்ளது. ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளையே பாதுகாக்கும் பெருமை உள்ள பாதுகைகள் எப்போதும் எனது தலையில் இருக்க வேண்டும்.

இங்கு உள்ள சேஷம், சேஷி என்பதற்கு “அடிமை, எஜமானன்” என்னும் பொருள் அல்லாமல், “பெருமைப்படுத்துகிற பொருள், பெருமைபடுத்தப்பட்ட பொருள்” என்றும் கூறுவார்கள். பாதுகைகளைத் தங்கள் தலைகளில் வைத்துக் கொண்டதால் மிகுந்த பெருமை கிட்டுவதால், பாதுகையானது பெருமைப்படுத்தும் பொருள் எனலாம். திருவடிகளுக்கே பாதுகைகள் பாதுகாப்பாக உள்ளதால், பெருமைபடுத்தப்பட்ட பொருள் என்றும் கூறலாம்.