Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 60)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

ஜகத் ஜநந ரக்ஷண க்ஷபண ஸங்கிந: ரங்கிண: பவித்ரதமம் ஆத்ரியே பகவத: பதத்ர த்வயம் சிவத்வ கரண க்ஷம த்ரிதிவஸிந்து ஸம்பந்திநம் ப்ரதாவ்ய சரணம் நிஜம் ப்ரணிததாதி யத்ர ப்ரபு:

இந்த உலகங்கள் அனைத்தையும் படைத்து, காத்து, ப்ரளயம் ஏற்படும்போது தன்னுள் லயிக்கும்படிச் செய்பவன்; பகவான் என்ற பதத்திற்கு ஏற்றவன் - இப்படிப்பட்டவன் ஸ்ரீரங்கநாதன்ஆவான். அவனுடைய தூய்மையான பாதுகைகளை நான் வணங்குகின்றேன், அவற்றை எனக்கு ஆதரவாகக் கொள்கிறேன். அப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன? ப்ரம்மனால் த்ரிவிக்ரமனின் திருவடிகளைக் கழுவிய நீரைத் தலையில் ஏற்றதால் சிவன் மங்களம் அடைந்தார். அத்தகைய தூய்மையான திருவடிகளைப் பாதுகைகளின் மீது வைக்கும் போது ஸ்ரீரங்கநாதன் தனது திருவடிகளைக் கழுவிய பின்னரே வைக்கிறான்.

நம்பெருமாள் த்ரிவிக்ரமனாக உயர்ந்தபோது, அவனது திருவடிகளை ப்ரம்மன் புனிதமான கங்கையைக் கொண்டு கழுவினான். ஆயினும் நம்பெருமாள் தன்னுடைய சஞ்சார காலங்களில் பாதுகைகளைத் தன் திருவடிகளில் சேர்ப்பதற்கு முன்பாக, திருவடிகளை மிகவும் சுத்தமாகக் கழுவிக் கொள்கிறான். பாதுகைகள் அத்தனை புனிதமானவை என்று கருத்து.