Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 57)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

கநகஸரித் அநூபே கல்ப வ்ருக்ஷஸ்ய பூஷ்ணோ பத கிஸலய லக்நா பாதுகே மஞ்ஜரீ த்வம் பரிணதி மதுராணாம் யா பலாநாம் ஸவித்ரீ வஹஸி நிகமப்ருந்தை: ஸம்பதம் ஷட்பதாநாம்.

பாதுகையே! காவேரி நீரால் சூழப்பட்ட திருவரங்கத்தில் அழகிய மணவாளன் சயனித்துள்ளான். அவனைக் காணும் போது கற்பக மரம் போன்று உள்ளான். அவனது திருவடிகள் அந்த மரத்தின் தளிர் இலைகள் போன்று அழகாக உள்ளன. அப்படிப்பட்ட திருவடிகள் என்னும் தளிர் இலைகளின் நடுவே உள்ள அழகான மலர்கள் போன்று நீ உள்ளாய். உன்னிடம் இருந்து நன்மையை அளிக்கவல்ல பலன்கள் என்ற பழங்கள் தோன்றுகின்றன. இதனை அறித்த வேதங்கள் வண்டுகள் போன்று மலராகிய உன்னையே சுற்றுகின்றன போலும்.

இங்கு பெரியபெருமாளின் திருமேனியை ஒரு கற்பக மரமாக வர்ணித்தார். அவனது திருவடிகள் தளிர் இலை போன்று உள்ளன என்றார். இங்கு ஒரு சந்தேகம் எழலாம். பொதுவாக எம்பெருமானின் திருவடிகள் தாமரை போன்று சிவந்த மலராகக் கூறுவது அல்லவா வழக்கம், இங்கு இவர் இலை போன்று என எவ்வாறு கூறுகிறார்? தளிர் இலைகளும் சிவந்து காணப்படும் என்பது ஒரு பதிலாகும். பெரியபெருமாளின் திருவடிகளின் நிறம் எப்போதும் ஆழ்வார் கூறியபடி - பச்சை மாமலைபோல் மேனி - என்பதற்கு ஏற்ப சற்றே பச்சை நிறமே, அதனால்தான் இலைகளாகத் திருவடியைக் கூறினார்; ஆனால் சிவந்த மலர் போன்ற அவனது பாதுகைகள் அவனுடன் எப்போதும் ஒட்டியபடி உள்ளதால், அவற்றையே திருவடி என்று நினைத்து மயங்குபவர்கள் உண்டு - என்றும் கூறலாம்.