Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 55)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

சம தம குண தாந்த உதந்த வைதேசிகாநாம் சரணம் அசரணாநாம் மாத்ருசாம் மாதவஸ்ய பதகமலம் இதம் தே பாதுகே ரக்ஷ்யம் ஆஸீத் அநுதயநிதாநாநாம் ஆகமாநாம் நிதாநம்

பாதுகையே! கண் முதலான இந்த்ரியங்களைத் தன்வயப்படுத்தி அடக்குதல்; மனதைக் கட்டுப்படுத்தல்; தயை போன்ற குணங்கள் கொண்டிருத்தல்; பக்தியுடன் இருத்தல் - இது போன்ற உயர்ந்த தன்மைகளுக்கு மாறுபட்டவர்களாக நாங்கள் உள்ளோம். எங்களை இவ்வாறு உள்ள நிலையில் இருந்தும் காப்பாற்றுவது எது? தோற்றம் மற்றும் அழிவு போன்றவை இல்லாமல், என்றும் உள்ள வேதங்களுக்கும் புதையல் போன்று உள்ள நம்பெருமாளின் திருவடிகளே எங்களைக் காக்கின்றன. அப்படிப்பட்ட உயர்ந்த திருவடிகளையே நீ காப்பாற்றுகிறாய்.

நமக்காக திருவடிகள் உள்ளன. அந்தத் திருவடிகளுக்காகவும், நம்பெருமாளுக்காகவும் கவலைப்பட யாரேனும் உள்ளனரா என்றால் லக்ஷத்தில் ஒருவர் கூடக் கிடைப்பது அபூர்வம். இதனைக் கண்ணனும் கீதையில் தெளிவாகவே கூறுகிறான் (மஹாத்மா துர்லபம்). இவ்விதம் லக்ஷத்தில் ஒருவன் நம்பெருமாளின் நலத்தைப் பற்றி நினைக்கிறான் அல்லவா? அந்த ஒருவனுக்காக மட்டுமே அவன் பெரியகோயிலில் இன்னமும் உள்ளான். இவ்விதம் அல்லாமல் அவனது திருவடிகளை எப்போதும் பாதுகாத்து நிற்பதால், திருவடிகளைக் காட்டிலும் பாதுகைக்கு மேன்மை அதிகம் என்றார்.