Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 46)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
பதஸரஸிஜம் ஏதத் பாதுகே ரங்கபர்த்து: ப்ரதிநிதி பதவீம் தே காஹதே ஸ்வேந பூம்நா ததிதம் அபரதா சேத் திஷ்டத: தஸ்ய நித்யம் கதம் இவ விதிதார்த்தா: த்வாம் பஜந்தே மஹாந்த:
பாதுகையே! தாமரை மலர் போன்ற மென்மையான நம்பெருமாளின் திருவடிகள் உனக்கு ஈடான பெருமையை எப்படிப் பெற்றன தெரியுமா? - உன்னை அணிந்துள்ளதாலே பெற்றன. இது தவறான கருத்து என்றால் - அங்கு செல்லும் அனைவரும் பெரியபெருமாளின் திருவடிகளை விடுத்து, உன்னை உயர்வாக எண்ணி, உன்னைத் தங்கள் தலைகளில் ஏன் வைத்துக் கொள்கின்றனர்?
முக்கியமானவர் ஒருவர், அவரது ப்ரதிநிதி ஒருவர் என்று இருவர் உள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். முக்கியமானவர் ஏதோ ஒரு நேரத்தில் அங்கு இல்லை என்றால், ப்ரதிநிதியாக உள்ளவருக்கு மதிப்பு குறைவே ஆகும். இங்கு பாதுகைகள் முக்கியமானவை என்றும், பெரியபெருமாளின் திருவடிகள் ப்ரதிநிதி என்றும் கொள்ளப்பட்டன. ஆக முக்கியமான பாதுகை உள்ளபோது அதனை ஏற்பார்கள் அன்றி பெரியபெருமாளின் திருவடிகளை ஏற்பார்களோ? அந்தத் திருவடிகளுக்கு உள்ள பெருமை என்பதே உனக்குப் ப்ரதிநிதியாக உள்ளது என்பதே ஆகும்.